http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 165

இதழ் 165
[ ஜூன் 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள் - 2
நெடுங்களநாதர் கோயில் -1
சூரியனார் கோயில்-ஆடுதுறைக்கருகில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 16 (நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 15 (உனக்காக உறைபனியில்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 14 (துயரிலும் குன்றா அன்பு)
இதழ் எண். 165 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 16 (நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்)
ச. கமலக்கண்ணன்


பாடல் 16: நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
立ち別れ
いなばの山の
峰に生ふる
まつとし聞かば
今帰り来む

கனா எழுத்துருக்களில்
たちわかれ
いなばのやまの
みねにおふる
まつとしきかば
いまかへりこむ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: ஆளுநர் யுக்கிஹிரா

காலம்: கி.பி. 818-893.

இத்தொடரின் 11வது செய்யுளை இயற்றிய அறிஞர் தக்காமுராவை நாடு கடத்தும் அதிகாரத்தை முன்னாள் பேரரசர் சாகா பெற்றிருந்தார் எனப் பார்த்தோம் அல்லவா? அவர் தண்டனை பெற்றவர்களை மன்னிக்கும் அதிகாரமும் பெற்றிருந்ததால் இப்பாடலின் ஆசிரியரின் தந்தை இளவரசர் அபோவை மன்னித்தார். தண்டனை பெறும் அளவுக்கு அபோ என்ன குற்றம் செய்தார்? இதற்கும் 11வது செய்யுளுக்கும் தொடர்பு உள்ளது. பேரரசர் சாகாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற அவரது அண்ணன் ஹெய்செய் தனது மனைவி குசுகோ மற்றும் மைத்துனன் நகானாரி ஆகியோருடன் இணைந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டார் என்று பார்த்தோமல்லவா? அந்த ஹெய்செய்யின் மகன்தான் இந்த அபோ. பின்னாளில் சாகாவின் கோபம் குறைந்து தலைநகருக்குள் நுழைய அபோ அனுமதிக்கப்பட்டார். அபோவின் இரு மகன்கள்தான் யுக்கிஹிராவும் நரிஹிராவும்.

ஆட்சிப்பொறுப்பு சாகாவின் வழிவந்த வம்சத்துக்கே உரித்தானதால் ஹெய்செய்யின் வம்சம் அதிகாரிகளாக மட்டுமே பணிபுரிந்துவந்தது. அந்த வகையில் யுக்கிஹிரா தற்போதைய தொத்தோரி மாகாணத்தின் இனாபா மாநகரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்பொழுது தலைநகரை நீங்கும்போது எழுதப்பட்டதுதான் இப்பாடல். இவர் யார் மீதும் காதல்வயப்பட்டதாகக் குறிப்புகள் ஏதும் இல்லாததால் தான் நேசிக்கும் தலைநகர் கியோத்தோவை எண்ணிக்கூட எழுதி இருக்கலாம் என்றும் உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின்னர் மேலும் பல உயர்பதவிகளை வகித்தார். கி.பி. 881ல் அரச வம்சத்தினரின் குழந்தைகள் முறையான கல்வியைப் பெறுவதற்காக ஷோகக்குயின் என்ற கல்விக்கூடம் ஒன்றை நிறுவியது இவரது வரலாற்றுப் பங்களிப்பாக இன்றும் நினைவுகூரப்படுகிறது.

கென்ஜியின் கதை எனும் புதினத்தை ஒட்டித் தயாரிக்கப்பட்ட பின்னாளைய நோஹ் நாடகம் ஒன்று இவர் சுமா என்னும் ஊரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்த இரு சகோதரிகள் மட்சுகசே, மருசமே ஆகியோருடன் காதல்வயப்பட்டதாகவும் பதிவு செய்திருக்கிறது. அங்குத் தனிமையைப் போக்க "சுமா கொத்தோ" என்ற ஒற்றை நரம்பைக்கொண்ட மரத்தாலான நரம்பிசைக்கருவி ஒன்றைத் தயாரித்ததாகவும் அந்நாடகம் கூறுகிறது. இவர்தம் இசைத்திறனால் தலைசிறந்த 36 கவிஞர்களுள் ஒருவராக இடம்பெற்றிருக்கிறார்.

பாடுபொருள்: உன்னை நீண்டகாலம் காக்கவைக்க மாட்டேன் என உறுதி கூறுதல்

பாடலின் பொருள்: உன்னைப் பிரிந்து இனாபா மலைமீது இருக்கும் உயர்ந்த சிகரத்திற்குச் செல்கிறேன். ஆனால் நீ எனக்காகக் காத்திருக்கிறாய் என்று கேள்விப்பட்டால் உடனே திரும்பி வந்துவிடுவேன்.

எளிமையான இப்பாடல் பல சிலேடைச் சொற்களைக் கொண்டது. ஜப்பானிய மொழியில் பல சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை உடையவை. உதாரணமாக இச்செய்யுளில் வரும் மட்சு என்ற சொல்லைக் காணலாம். இதற்குக் காத்திருத்தல் எனும் பொருளும் ஊசியிலை மரம் எனும் முற்றிலும் வேறான பொருளும் உள்ளன. எந்த இடத்தில் எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருள் என்று எளிதாகப் புரிந்துகொள்ளத்தான் கான்ஜி எனப்படும் சித்திரவடிவச் சீன எழுத்துருக்கள் உதவுகின்றன. சாதாரணமாக まつ என எழுதப்படும் இந்த மட்சு எனும் சொல்லை 待つ என எழுதினால் காத்திருத்தல் என்றும் 松 என எழுதினால் ஊசியிலை மரம் எனவும் பார்த்தவுடனே எளிதாகப் பொருள்கொள்ளலாம். ஆனால் இப்பாடலில் எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ள ஏதுவாகச் சீன எழுத்துருக்களைப் பயன்படுத்தாமல் まつ என்றே பயன்படுத்தி இருக்கிறார்கள். இனாபாவும் அதேபோன்றதுதான். いなば என்ற சொல்லை 因幡 என எழுதினால் ஊரின் பெயராகவும் 往なば என எழுதினால் போய்விட்டால் என்றும் பொருள் கொள்ளலாம் என்பதால் கவிநயம் வேண்டி いなば என்றே எழுதியிருக்கிறார்கள்.

இப்பாடலின் இன்னொரு சுவையான பக்கம் காணாமல் போன மனிதர்களையும் செல்லப்பிராணிகளையும் திரும்ப வரவழைக்க நடத்தப்படும் வேண்டுதலில் இடம்பெறுவதுதான். நீ எனக்காகக் காத்திருக்கிறாய் என அறிந்தால் திரும்பிவிடுவேன் என்ற வரியில் தொனிக்கும் சோகம் தொலைந்த செல்லப்பிராணியின் நினைவுகளால் வருடிக்கொடுப்பதுபோல் இருக்குமாம்.


வெண்பா:

மரநிறை மைவரை காக்கும் பணிக்கண்
இரதியை நீங்கித் துவள்வோன் - வரவினை
நோக்கிய நின்காத் திருத்தல் உணர்த்தும்
கணத்தில் நிகழுமென் மீள்வு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் 12-ஜூன்-2022 அன்று வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.